Sunday 19th of May 2024 12:03:56 AM GMT

LANGUAGE - TAMIL
-
தொழில்பயிற்சியுடன்,தொழில்வாய்ப்புக்களை  பெற்றுக்கொடுக்க  கிளிநொச்சி செயற்பாட்டுக்குழு திட்டம்!

தொழில்பயிற்சியுடன்,தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க கிளிநொச்சி செயற்பாட்டுக்குழு திட்டம்!


மூன்றாம்நிலை மற்றும் தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்து, திறன்கள் அபிவிருத்தி மூலம் இளைஞர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தொழிற்சந்தையில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டுக்குழுவின் கூட்டம் நேற்றுக் காலை 10 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் றூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சின் பிரதிநிதி விஜேசிங்க, அமைச்சின் கீழான இந்தப் புதிய வேலைத்திட்டம் தொடர்பாக நிகழ்வில் பங்குபற்றிய தொழில்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக துறைசார் உத்தியோகத்தர்களுக்கு விளக்கிக் கூறினார்.

அவருடன் இணைந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் கோ.றுஷாங்கன் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்களை கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கினார்.

தொழில்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை பதிவுசெய்தல், தராதர அங்கீகாரம், தேசிய தொழில்தகைமைச் சான்றிதழ் மட்டங்கள், தரச்சான்றிதழ் மற்றும் கணிப்பீட்டு ஒழுங்கமைப்பு உள்ளிட்ட, மூன்றாம்நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றி முழுமையான விளக்கம் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தொழில்கல்வி அல்லது பயிற்சியை வழங்கவேண்டிய நிறுவனங்களின் சட்டபூர்வத் தன்மை, சான்றிதழ்களுக்கான அங்கீகாரம் என்பன தொடர்பாகவும் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில்பயிற்சி அதிகாரசபை(NAITA), ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனம், தொழில்நுட்பவியல் கல்லூரி, சமுத்திர பல்கலைக்கழகம் ஆகிய அரச தொழில்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தத்தம் நிறுவனங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கினர்.

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைக் கல்விக் காலத்திலேயே தொழில்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புக்கள், அதன்மூலம் பெறக்கூடிய தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான விளக்கங்கள் கல்வி-தொழில் வழிகாட்டல் அலுவலர்கள் மூலம் வழங்கப்படுவதுடன், தேசிய மற்றும் சர்வதேச தொழிற்சந்தையில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு, மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அலுவலர்கள் வழிகாட்டவேண்டும் என்றும் நிகழ்வில் வலியுறுத்திக் கூறப்பட்டது.

இந்தச் செயற்குழுவின் செயற்பாடுகளை விளைத்திறன் மிக்கதாக ஆக்கிக்கொள்ளும் வகையில், பாடசாலை உபகுழு, கைத்தொழில்துறை உபகுழு, சுயதொழில்முயற்சியாண்மை உபகுழு உள்ளிட்ட உபகுழுக்களும் அமைக்கப்பட்டு, எதிர்காலத்தில் இந்த உபகுழுக்களின் செயற்பாடுகள் மூலம் தொழிற்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE